திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்

0
6

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்: பன்னிரு திருமறைகளில் முதலாவதாக வைத்து போற்றப்படுவது திருஞானசம்பந்தர் எழுதிய பாடல்கள். இவர் எழுதிய பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளில் இடம் பெற்றுள்ளது. இவரை விட மூத்தவராகவும் பெரியவராகவும் இருப்பவர் திருநாவுக்கரசர் இருப்பினும் முதல் மூன்று திருமறைகளில் வைத்து போற்றப்படும் அளவிற்கு சிறப்பு பெற்றது இவரின் பாடல்கள்.

சம்பந்தர் தோனிபுரம் என்று சொல்லக் கூடிய சீர்காழியில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தவர். சம்பந்தரும் நாவுக்கரசரும் இருவருமாக பல சிவ திருத்தலத்திற்கு சென்று பல பாடல்களை பாடி அருளியுள்ளனர்.

கோளறு பதிகம் தோன்றிய வரலாறு:

திருமறைக்காடு (வேதாரண்யம்) என்கிற திருத்தலத்தில் இருந்தபோது மதுரையில் அரசாண்ட பாண்டிய மன்னன் சமணமதத்தில் பற்றுக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவி மங்கையர்க்கரசியோ சைவ மதத்தில் பற்றுக் கொண்டிருந்தார். பாண்டிய நாட்டில் சமண மதம் ஓங்குவதைத் தடுக்கும் பொருட்டு திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளி அங்கே சைவம் தழைக்க உதவ வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் அவருக்கு அழைப்பு விடுத்தார்.

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்

அரசியாரின் அழைப்பினை மதுரை ஏவலர்கள் திருமறைக்காடு வந்து திருஞான சம்பந்தரிடம் தெரிவித்தனர். திருஞான சம்பந்தர் மதுரை செல்ல உடன்பட்டு திருநாவுக்கரசரிடம் விடைபெறச் சென்றார். திருநாவுக்கரசர், அந்தக் கணத்தில் கோள்களின் அமைப்பும் அன்றைய நாளும் தீமை பயக்கும் அறிகுறிகள் காட்டுவதாகக் கூறி சம்பந்தரின் பயணத்தை ஒத்திப்போடச் சொன்னார்.

நாளும் கோளும் நல்லவர் இல்லை’‘ சிவனையே நினைத்திருக்கும் நாளும் கோள்களும் என்ன செய்து விடும் என்று கூறி அவை யாவும் நன்மையே தரும் என்று பதிகம் (பத்து பாடல்களின் தொகுப்பிற்கு பதிகம் என்று பெயர்) ஓன்று பாடினார் அவை தாம் கோளறு பதிகமாக உள்ளது. ஞானசம்பந்தர் பதிகம் மட்டும் 11 பாடல்களை உடையதாக இருக்கும்.

கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் என்கிற பெயரால் பல்வேறு நம்பிக்கைகளில் தம்மை இழக்கும் மக்கள், இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது சைவ சமயத்தாருக்கு ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி.

இன்றும் ஏதாவது முக்கிய காரியமாகக் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் இந்தப் பதிகத்தை முழுதாகவோ முதல் பாடலை மட்டுமோ அவசரமாக முணுமுணுத்து விட்டுச் செல்லும் வழக்கம் பலரிடம் உண்டு. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோளறு பதிகத்தினை பாராயணம் செய்து இறைவன் அருளை பெறவும்.

இதையும் அறிந்து கொள்க: பல்லி விழும் பலன்கள் – செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது

கிரகங்களின் சஞ்சாரம்:

சனி பெயர்ச்சி என்பது இரண்டரை வருடத்திற்கு ஓரு முறை நிகழும் அப்போது ஓரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது கிரக தோஷம் ஏற்பட்டு ஓரு சில ராசிக்கு நன்மைகளும் ஓரு சில ராசிக்கு தீமைகளும் ஏற்படும். அந்த கிரக தோஷத்திலிருந்து விடுபட திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தை தினமும் பக்தியுடன் படித்தால் கிரக தோஷம் நீக்கி நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே, சம்பந்தர் அருளி செய்த கோளறு பதிகத்தை பாடி அருளை பெறுவோம்.

கோளறு பதிகம் முதல் பாடல்:

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

விளக்கம்: இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். துன்பங்கள் ஏதும் ஏற்படாது.

இதையும் கவனிக்க: ராசி பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

கோளறு பதிகம் இரண்டாம் பாடல்:

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

விளக்கம்: அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. பதிலாக நன்மையே விளைவிக்கும்.

கோளறு பதிகம் மூன்றாவது பாடல்:

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

விளக்கம்: திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிந்து குற்றமற்ற செல்வமும் வந்து எய்துவர்.

கோளறு பதிகம் நான்காம் பாடல்:

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

விளக்கம்: சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிந்து, கொடிய நோய்களிடமிருந்து பாதுகாப்பார்.

கோளறு பதிகம் ஐந்தாம் பாடல்:

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

விளக்கம்: கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து சேராது.

கோளறு பதிகம் ஆறாவது பாடல்:

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

விளக்கம்: சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு துன்பம் நேராது. மாறாக நன்மையே நடக்கும்.

கோளறு பதிகம் ஏழாவது பாடல்:

செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

விளக்கம்: வெப்பம், குளிர், வாதம், பித்தம் முதலான நாடிகள் ஆகியவை இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.

கோளறு பதிகம் எட்டாம் பாடல்:

வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

விளக்கம்: கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யுமாக.

கோளறு பதிகம் ஓன்பதாம் பாடல்:

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

விளக்கம்: நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மற்ற தெய்வங்கள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் பலவும், கடலும், மேரு மலையும் அடியார்க்கு நன்மையே விளைவிக்கும்.

கோளறு பதிகம் பத்தாம் பாடல்:

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

 விளக்கம்: புத்த மதத்தவரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான வெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.

கோளறு பதிகம் பதினொறாம் பாடல்:

தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!

விளக்கம்: இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.

அனைத்துவித கிரக தோஷங்களும் நீங்கி இன்பமான வாழ்வினை பெற திருஞானசம்பந்தர் இயற்றி அருளிய கோளறு பதிகத்தை பாடி நன்மை பெறுக.

இது போன்ற ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிடம், தமிழ் இலக்கியம், விளையாட்டு, செய்திகள், சமையல் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here