குஷ்பு: காங்கிரசில் இருந்து பாஜவில் இணைந்ததும் குஷ்பு கடந்த சட்ட மன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். எனினும் கட்சியில் தனக்கு ஏதாவது பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவருக்கு பெரிய பதவி எதுவும் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் தனக்கு கட்சியில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நடிகை குஷ்பு அவ்வப்போது தனது குமுறல்களையும் வெளிப்படுத்தி வந்தார். மேலும் கட்சி தொடர்பான ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு பாஜவில் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மம்தா குமாரி, தெலினா காங்டுப், குஷ்பு சுந்தர் ஆகிய 3 பேரும் தேசிய பெண்கள் ஆணையத்தின் (என்சிடபிள்யூ) உறுப்பினர்களாக நியமிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. இவர்கள் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை பதவியில் நீடிப்பர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.