சமந்தா: தெலுங்கில் ‘குஷி’ என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போதுதான் சமந்தாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மயங்கி விழுந்தார். பரிசோதனைக்குப்பின் அவர் மயோசிடிஸ் எனும் தசை அழற்ஜி நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதற்காக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். அந்த புகைப்படத்தை சமந்தாவே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் ஆகஸ்டில் நடைபெற்று வந்த குஷி பட ஷீட்டிங் நிறுத்தப்பட்டது. கடந்த 4 மாதங்களாக சமந்தா ஓய்வில் இருக்கிறார்.
இந்நிலையில் இம்மாதம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் தனது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் இம்மாதமும் படப்பிடிப்பு வேண்டாம் என சமந்தா கூறியுள்ளாராம். கட்டாயம் இன்னும் ஒரு மாதம் நான் ஓய்வு எடுக்க வேண்டும். அதனால் அடுத்த மாதம் படப்பிடிப்பு நடத்தலாம் என்று கூறியுள்ளாராம். தற்போது சமந்தா தனது நண்பர்களின் ஆலோசனையின் பேரில் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால்தான் அவர் ஷீட்டிங்கை தள்ளிப்போட சொல்லியிருக்கிறாராம்.
இதனால் படத்தின் ஹீரோவான விஜய் தேவரகொண்டாவின் கால்ஷீட் வீணாகி வருகிறதாம். இதனால் ‘ஜெர்சி’ படத்தை இயக்கிய கவுதம் தின்னனூரி இயக்கும் படத்தில் நடிக்க தனது கால்ஷீட்டை மாற்றி கொடுத்துவிட்டாராம் விஜய் தேவரகொண்டா. இதனையடுத்து குஷி படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.