லாலு பிரசாத்: பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்க்கு பல வருடங்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருந்த போதும் கூட நீதிமன்ற அனுமதி பெற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவருக்கு சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக இவர் சென்ற மாதம் சிங்கப்பூர் சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு சமீபத்தில் தான் நாடு திரும்பினார். லாலு-பரி தம்பதியனருக்கு ஏழு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உட்பட ஒன்பது சந்ததியினர் உள்ளனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் அவர் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சாரியா சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவரது சிறுநீரகம் லாலுவுக்கு பொருந்துவதாக மருத்துவ பரிசோதனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. லாலுவின் மகள் ரோகிணி சிறுநீரக தானம் அளிக்க முன்வந்திருப்பதை தொடர்ந்து இந்த மாத இறுதியில் சிங்கப்பூரிலேயே லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும் என ராஷ்டிய ஜனதா கட்சி தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு லாலு குறைந்தபட்சம் இரண்டு வாரம் அங்கயே தங்கி சிகிச்சை பெறுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.
லாலுவின் மனைவி ரபரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் சிங்கப்பூர் செல்ல உள்ளனர். தேஜஸ்வி யாதவ் தற்போது பீகாரின் துணை முதல்வராக உள்ளார் என்பதும் ரபரி தேவி முன்னாள் பீகார் முதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.