வாணி ஜெயராம்: பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் நேற்று பிற்பகல் அவரது சொந்த வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78. வாணி ஜெயராம் அவர்களின் இயற்பெயர் கலைவாணி. அவர் அதை வாணி என சுருக்கி வைத்துக் கொண்டார். அவர் ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் அவரது இசை திறமைக்கு பெரும் உறுதுணையாக இருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். இவர் பாடிய பாடல்களுக்காக மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார்.
இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3 வது தளத்தில் தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் முன்பே இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இவர் வீட்டு வேலைக்காக மலர்க்கொடி என்ற பணிப்பெண்ணை அமர்த்தி இருந்தார். அவர் நேற்று காலை வழக்கம் போல் 10 மணியளவில் வாணி ஜெயராம் வீட்டுக்கு வேலைக்கு வந்துள்ளார். அவர் பல முறை கதவை தட்டியும், செல்போன் மூலம் அழைத்தும் அவர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த பணிப்பெண் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து இன்னொரு சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அவர் நெற்றியில் காயத்துடன் படுக்கை அறையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வயது முதிர்வின் காரணமாக வாணி ஜெயராம் படுக்கை அறையில் நிலைத்தடுமாறி அருகில் இருந்த கண்ணாடி மேஜை மீது விழுந்ததில் அவரது நெற்றியில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம். இருந்தாலும் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.