மெஸ்ஸி: கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷீட் முறையில் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை தன் வசப்படுத்தியது. 1978 மற்றும் 1986ம் ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது அர்ஜென்டினா அணி. மேலும் இந்த இறுதி போட்டியுடன் சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி இந்த வெற்றிக்கு பிறகு மீண்டும் தான் தொடர்ந்து விளையாடப் போவதாக அறிவித்து அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
கோப்பையை வென்ற பின்னர் மெஸ்ஸி அவ்வப்போது சில சுவாரஸ்யமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கோப்பையுடன் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. மெஸ்ஸி தனது படுக்கையில் உலககோப்பையை கட்டி பிடித்தவாறு உறங்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ஸ்பானிஷ் மொழியில் “குட் மார்னிங்” என்று ஸமைலி கண்கள் எமோஜியுடன் சிரித்த முகத்துடன் எழுதி பதிவிட்டுள்ளார்.
அவருடைய இந்த பதிவு அரை மணி நேரத்தில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களை குவித்துள்ளது. வைரலான இந்த புகைப்படம் மக்களிடம் இருந்து கோடிக்கணக்கான நற்கருத்துகளையும் பெற்று வருகிறது. கமெண்டில் பதிவிட்டு வரும் ரசிகர்கள் ‘உலகின் ராஜா’ என்றும் ‘நீங்கள் எல்லா காலத்திலும் சிறந்த வீரர்’ என்றும் சிலர் தங்கள் விருப்பங்களை காட்ட விதவிதமான எமோஜிகளையும் பகிர்ந்து வருகின்றனர்.