திருச்செந்தூரில் வைகாசி விசாக பெருவிழா பெரும் அலைகளின் ஓசைக்கு மத்தியில் அழகு நிறைந்து காணப்படும் திருச்செந்தூரில் முருகப்பெருமானின் வைகாசி விசாகம் பக்தர்களின் “அரோகரா அரோகரா” முழக்கத்துடன் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
முருகனுக்கு அறுபடைகள் உண்டு அதில் இரண்டாவதாக வைத்து போற்றப்படும் திருகோயில் தான் திருச்செந்தூர். இத்திருத்தலத்தின் வந்து இறைவனை மனமுறுகி வழிப்பட்டால் துன்பங்கள் நீங்கி இன்பம் வந்து சேரும் என்று பக்தர்களின் மனதில் காணப்படும் நம்பிக்கை.
தமிழ் இலக்கியங்கள் கூட இத்திருக்கோயிலின் வரலாற்றையும் முருகன் குடியிருக்கும் திருச்செந்தூரையும் வர்ணிக்கிறது. பத்துப்பாட்டில் காணப்படும் முதல் நூலாக நக்கீரா் எழுதிய திருமுருகாற்றுப்படை காணப்படுகிறது. இந்நூல் சைவத் திருமுறைகளில் முதலாவதாகவும் பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூரில் வைகாசி விசாக பெருவிழா சிறப்பாக நடந்தது.
முருகப்பெருமான் பிறந்த ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர நன்நாளை விசாக பெருநாளாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் முருகனை வழிப்பபாட்டால் வரும் நன்மையை காட்டிலும் வைகாசி விசாக நாளில் வழிப்பட்டால் நன்மைகள் பல நிகழும் என்பது ஐதீகம்.
அதிகாலையில் பக்தர்கள் கடலில் முருகனை நினைத்து நீராடி பின் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுபத்தி, கற்பூரம் என அனைத்தையும் வைத்து படைத்து வணங்கி முருகப்பெருமான் சன்னதிக்கு சென்று பக்தர்கள் வழிப்பட்டனர்.
அதிகாலை 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடந்தது.வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்தனர்.
நேற்று அதிகாலையிலிருந்து பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பாதயாத்திரையாக குவிந்த பக்தர்கள் நீண்ட வேல்களால் அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். நெல்லை, நாகர்கோவில், துாத்துக்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று (13ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
அதிகாலை 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.