கள்வன். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கள்வன்’. இப்படத்தை ஆக்செஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்துள்ளார். இப்படத்தில் பாரதிராஜா, இவானா, தீனா, கு.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாரும், இவானாவும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘லவ் டுடே’ என்ற படத்திலும் இவானா நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இவானா மிகவும் பிரபலமாகிவிட்டார்.
காமெடி அட்வெஞ்சர் டிராமாவாக உருவாகியுள்ள ‘கள்வன்’ படத்தை பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். மேலும் ரமேஷ் ஐயப்பனுடன் இணைந்து கதை மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். எஸ்.ஜே.அர்ஜூன், சிவகுமார் முருகேசன் இணைந்து கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு சினேகன், ஏகாதேசி, மாயா மகாலிங்கம், நவக்கரை நவீன் பிரபஞ்சம் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்துவிட்டதால் திரைக்கு வரும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.