சபரிமலை: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய நெய் அபிஷேகம் காலை 11.30 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து கலச பூஜை, களபாபிஷேகம் ஆகியவற்றுக்குப்பின் 1.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மீண்டும் மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.
இதற்கிடையே பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரண ஊர்வலம் மாலை 6 மணியளவில் சரங்குத்தியை அடைந்தது. சரங்குத்தியில் ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடைந்தது. பின் திருவாபரணம் ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து 6.47 மணியளவில் முதல் முறையாக பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிந்தது. அடுத்து மீண்டும் இரண்டு முறை மகர ஜோதி தெரிந்தது. ஜோதியை தரிசித்ததும் சபரிமலை, பாண்டித்தாவளம், புல்மேடு உட்பட பல்வேறு பகுதிகளில் திரண்டிருந்த லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் சரணகோஷம் எழுப்பினர். இதன்பின் இரவு 8.45 மணியளவில் பிரசித்தி பெற்ற மகரசங்கம பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின்போது திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்து அனுப்பப்பட்ட நெய் மூலம் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.