மகேஷ் பாபு: தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராவார். இவர் தமிழிலும் ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்துள்ளார். இவரது தந்தை கிருஷ்ணாவும் தெலுங்கின் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர். அவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை அறிவித்திருந்தது. இந்நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அவருக்கு வயது 80. சுமார் 350 படங்களில் நடித்துள்ள கிருஷ்ணா அவர்கள் இயக்குனர், தயாரிப்பாளர் என பல்வேறு தளங்களில் கடந்த 50 வருடமாக தடம் பதித்து வருகிறார். இவரது இழப்பு தெலுங்கு திரையுலகினருக்கு மாபெரும் இழப்பாகவே உள்ளது.
மேலும் இந்த 2022ம் ஆண்டு நடிகர் மகேஷ் பாபுவுக்கு இழப்புகளும், சோகமும் நிறைந்த ஆண்டாகவே அமைந்துவிட்டது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு(56) உடல் நலக்குறைவால் காலமானார். அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 29ம் தேதி மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி(70) காலமானார். இதனையடுத்து மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா(80) அவர்களும் இன்று காலமாகியிருக்கிறார். இதனால் ஒரே ஆண்டில் தாய், தந்தை, அண்ணன் என மூவரையும் இழந்து வாடும் நடிகர் மகேஷ் பாபுவிற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.