தெலுங்கு வாரசுடு: விஜய்யின் 66 வது படமாக உருவாகி வருகிறது ‘வாரிசு’. இதை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ‘வாரிசு’ தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் ‘ரஞ்சிதமே’ வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து வாரிசு படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுக்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கில் ரிலீசாக இருக்கும் வாரிசுவின் வாரசுடுக்கு இப்போதே தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் மூலம் பிரச்சினை எழுந்திருக்கிறது.
தெலுங்கில் ரீமேக் படங்களின் தயாரிப்புகள் அதிகரித்திருப்பதால் தெலுங்கு திரைத்துறையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் சங்கராந்தி மற்றும் தசரா போன்ற பண்டிகை காலங்களின் போது நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதியே அம்மாநில திரைப்படத்துறை தீர்மானம் எடுத்திருப்பதால் தற்போது விஜய்யின் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வாரசுடுக்கு முக்கியத்துவம் கொடுக்க தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் மறுப்பு தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் தெலங்கு பதிப்பு வெளியானபோது தயாரிப்பாளரும், ஃபிலிம் சேம்பரின் துணைத்தலைவருமான தில்ராஜு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது தான் தயாரிக்கும் வாரிசு படத்தின் வாரசுடுக்கு அதிக தியேட்டர்கள் கேட்பதாக குற்றஞ்சாட்டியதோடு, பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையின் போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக இருந்த விஜய்யின் வாரிசு படத்திற்கு தெலங்கு திரையுலகில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.