மஞ்சு வாரியர்: மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் தனுஷுடன் ‘அசுரன்’, அஜித்துடன் ‘துணிவு’ படங்களில் நடித்திருக்கிறார். ‘துணிவு’ படத்தில் நடித்த போது படப்பிடிப்புக்கு இடையில் கிடைத்த ஓய்வு நாட்களில் அஜித் பைக் பயணம் மேற்கொண்டார். அவரது நண்பர்களுடன் மஞ்சு வாரியரும் இந்த பைக் பயணத்தில் இணைந்தார். அதன் மூலம் மஞ்சு வாரியருக்கு பைக் மீது ஆசை வந்துவிட்டது. அஜித்துடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற மஞ்சு வாரியர் இந்த முறை பைக் ஓட்ட முறைப்படி கற்றுக்கொண்டார். பிறகு லைசென்ஸ் வாங்கினார்.
இந்நிலையில் பிஎம்டபிள்யூ 1250 ஜிஎஸ் பைக்கை மஞ்சு வாரியர் வாங்கியிருக்கிறார். இதன் விலை ரூ.24 லட்சமாகும். பைக்கை வாங்கிய கையோடு அதை ஓட்டியும் சென்றார். இது பற்றி அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறும்போது, ‘நம்மை வலிமையாக மாற்றும் விஷயங்களில் பயணத்துக்கு முக்கிய இடம் இருக்கிறது. அதுபோன்ற ஒரு பயணத்துக்கு நான் தயார் ஆகிவிட்டேன். இது எனக்கு மகிழ்ச்சி தரும் புதிய வழிகளில் ஒன்று. இதனால் என்னை மேலும் திடமானவளாக கருதுகிறேன். இதற்காக அஜித்துக்கு நன்றி’ என்று கூறியுள்ளார். அவர் பைக் ஓட்டும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.