சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை இன்று அதிகாலை தொடங்கியது. இதனால் முன்பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு மாத மாதம் பூஜைக்காக நடை திறக்கப்படும். ஓரிரு நாட்கள் மட்டுமே திறந்து பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் மூடப்படும். ஆனால், கார்த்திகை மாதம் முதல் தேதி திறக்கப்படும் ஐயப்பன் சன்னிதானம் மார்கழி மண்டல பூஜைக்காக திறந்தே காணப்படும் அப்போது பல மாநில பக்தர்களும் மாலை அணிந்து பம்பைக்கு வந்து புண்ணிய நதியில் நீராடி சபரி ஈசனை தரிசனம் செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இந்தாண்டு எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருகிறது.

இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தரிசனம் செய்யும் பக்தர்களை உடனடியாக சன்னிதானம் பகுதியில் இருந்து பக்தர்களை வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் 90 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாக கூறப்படும் நிலையில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டு 40 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை 29 லட்சம் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 250 கோடி வரை வசூல் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தங்க அங்கி சன்னிதானத்திற்கு வந்துள்ளதை ஓட்டியும் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. களபாபிஷேகத்திற்கு பிறகு நண்பகல் 12.30 மணி முதல் 1 மணி வரை தந்திரி கண்டர ரூராஜீவரு தலைமையில் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும். இரவு 10 மணிக்கு நடைசாத்தப்பட்டு, மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.
மேலும், இன்று நடைபெறும் மண்டல பூஜைக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை வருகிற 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் 14-ஆம் தேதி நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.