கவுதம்-மஞ்சிமா: நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் ‘தேவராட்டம்’ படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர். ஆனால் வெளி உலகத்திடம் இதை சொல்லாமல் மறைத்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களது காதலை காதலர் தினத்தன்று இன்ஸ்டாகிராமில் கவுதமும் மஞ்சிமாவும் சேர்ந்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு வெளிப்படுத்தினர். வரும் 28ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் திடீரென தனது இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இருந்த மற்ற ஹீரோக்களின் புகைப்படங்களையும் பிற சினிமா தொடர்பான புகைப்படங்களையும் மஞ்சிமா நீக்கியுள்ளார். விக்ரம் பிரபுவுடன் சத்ரியன், ஜீவாவுடன் களத்தில் சந்திப்போம், விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், விஷ்ணு விஷாலுடன் எப்ஐஆர் மற்றும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் மஞ்சிமா நடித்திருக்கிறார். இந்த படங்கள் தொடர்பான அனைத்து போட்டோக்கள், ஹீரோக்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களை நீக்கிவிட்டு, ‘என்னுடைய பழைய புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து தவிர்க்கிறேன். நான் மீண்டும் எல்லாவற்றையும் புதிதாக தொடங்குவேன்’ என மஞ்சிமா தெரிவித்துள்ளார்.