அஜய் தேவ்கன்: தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் ‘கைதி’. ஒரு வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியிருந்த இப்படத்தில் பாடல்களே இல்லை. மேலும் கார்த்திக்கு ஜோடி இல்லாத படமாகவும் இது உருவானது. இப்படத்தின் 2ம் பாகம் எப்போது உருவாகும் என்று தெரியாத நிலையில் இப்படத்தை இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் 3டியில் ரீமேக் செய்து வரும் 30ம் தேதி திரைக்கு கொண்டு வருகின்றனர். இப்படத்தை இந்தி நடிகர் அஜய் தேவ்கன் தயாரித்து இயக்கி கார்த்தி நடித்திருந்த வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழில் நரேன் நடித்திருந்த போலீஸ் கேரக்டரை இந்தியில் தபு நடிக்கும் கேரக்டராக மாற்றியுள்ளனர். பிளாஷ்பேக்கில் அஜய் தேவ்கன் மனைவி வேடத்தில் அமலா பால் நடித்துள்ளார். இந்தி பதிப்புக்காக நிறைய மாற்றங்கள் செய்துள்ள அஜய் தேவ்கன் ராய் லட்சுமியை ஒரு பாடல் காட்சியில் நடனமாட வைத்துள்ளார். தமிழில் ‘கைதி’யை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் கமர்ஷியலுக்காக நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள இந்தி ‘போலா’வை ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.