வாரிசு படம்: முன்னணி ஹீரோக்களின் படங்கள் பண்டிகை நாட்களில் ஒன்றாக வெளிவருவது ரசிகர்களுக்கு பெரும் திருவிழாவகவே அமையும். அந்த வகையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின. இந்த வருடம் தான் பெரும்பாலான படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் முன்னணி ஹீரோக்களான விஜய்யின் ‘வாரிசு’ படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக வரும் பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இரண்டு படங்களுக்கும் சரிசமமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இருதரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையைச் சேர்ந்த ரசிகர்கள் சுபாஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சபரிமலை கோயிலுக்கு சென்று அங்கு பதினெட்டாம்படி அருகில் வாரிசு பட பேனரை உயர்த்தி பிடித்தபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதையடுத்து படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்களால் இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.