கோவா திரைப்படவிழா: கடந்த 20ம் தேதி 53வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280 சிறந்த படங்கள் திரையிடப்படுகிறது. இதன் தொடக்க விழாவில் ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய், பாடலாசிரியர் பிரசூன் ஜோசி, நடிகை சாரா அலிகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஒன்றிய அமைச்சர் எல். முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இந்நிலையில் 2022ன் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இதையடுத்து நடிகர் சிரஞ்சீவிக்கு பிரதமர் மோடி அவர்கள் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு சிரஞ்சீவி நன்றி தெரிவித்தார். இதற்கு முன்னதாக இந்த விருது வஹீதா ரஹ்மான், ரஜினிகாந்த், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், அமிதாப் பச்சன், சலீம்கான், பிஸ்வஜித் சட்டர்ஜி, ஹேமமாலினி, பிரசூன் ஜோசி ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.