மும்முனை மின்சாரம்: சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. 67,000பேர் மட்டுமே இணைக்காமல் உள்ளனர். எத்தனை மின் இணைப்புகள் பெற்றிருந்தாலும் 100 யூனிட் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 4.5 லட்சம் விவசாயிகள் மின் இணைப்புக்கு பதிவு செய்து காத்திருந்த சூழலில் ஒன்றரை ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.
கோடைகாலமான மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் மின்நுகர்வு 18,000 மெகாவாட்டாக இருக்கும். விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். அதற்காக 316 துணை மின் நிலையங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அடுத்த ஆண்டு முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவதற்கான பணியை மின்வாரியம் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.