ஜெய்சல்மார்: பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி இருவரும் நீண்ட நாட்களாக திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. 2018ல் வெளியான ஆந்தாலஜி படமான ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ என்ற படத்தின்போது அவர்கள் இருவரும் சந்தித்தனர். பிறகு, கோலிவுட் இயக்குனர் விஷ்ணுவர்தன் 2021ல் இந்தியில் இயக்கிய ‘ஷெர்ஷா’ என்ற படத்தில் இணைந்து நடித்தனர். ஆனால் இப்படம் வெளியான பிறகும் அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகினர். அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதுபற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியானபோது இருவருமே அதை மறுத்தனர். ‘எம்.எஸ்.தோனி. தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற இந்திப் படத்தில் நடித்த பிறகு கியாரா அத்வானி மிகவும் பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் திடீரென்று திருமண பந்தத்தில் இணைந்தனர். கியாரா அத்வானி சமூக வலைதளத்தில் தனது திருமண போட்டோக்களை வெளியிட்டு ‘எங்களின் புதிய பயணத்தில் உங்களின் அன்பையும், ஆசிர்வாதத்தையும் வேண்டுகிறோம்’ என்று பதிவிட்டார். இத்திருமண விழாவில் பாலிவுட் பிரபலங்கள் கரண் ஜோஹர், ரோஹித் ஷெட்டி கலந்து கொண்டனர். தற்போது கியாராஅத்வானி, தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்கிறார். ராஜஸ்தானில் நடந்த திருமண விழாவில் 100 நாடுகளின் உணவு வகைகள் பரிமாறப்பட்டன.