முகல் தோட்டம்: டெல்லி ஜனாதிபதி மாளிகையில் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் தோட்டம் முகல் தோட்டம் அல்லது முகலாய தோட்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. அங்கு 3 தோட்டங்கள் உள்ளன. ஸ்ரீநகரில் உள்ள முகலாய தோட்டத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதால் மக்கள், ஜனாதிபதி மாளிகையில் உள்ள தோட்டத்தையும் முகல் தோட்டம் அல்லது முகலாய தோட்டம் என்று அழைத்து வந்தனர். இந்த தோட்டம் வழக்கமாக பிப்ரவரி முதல் மார்ச் வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்படும்.
சுதந்திர தினத்தின் 75 வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த முகல் தோட்டத்தை அமிர்த தோட்டம் (அமிர்த உத்யன்) என்று ஒன்றிய அரசு பெயர் மாற்றி உள்ளது. இதை ஜனாதிபதியின் துணை செய்திச் செயலாளர் நவிகா குப்தா தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜனாதிபதி மாளிகையின் இணையதளத்தில் முகலாய தோட்டம், அமிர்த தோட்டம் என இரு பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இந்த தோட்டம் நாளை மறுநாள் முதல் பொதுமக்களுக்காக திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தோட்டத்தை சர் எட்வின் லுட்யன்ஸ் 1917ம் ஆண்டு வடிவமைத்தார். இருப்பினும் 1928-1929 ஆம் ஆண்டில் தான் தோட்டத்திற்கான நடவுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.