தசை சிதைவு: திரைக்கு வந்த ‘தாதா 87’, ‘பவுடர்’ ஆகிய படங்களை எழுதி இயக்கியவர் விஜய்ஸ்ரீ.ஜி. தற்போது அவர் இயக்கத்தில் மோகன் நடிக்கும் ‘ஹரா’ படம் உருவாகி வருகிறது. இதையடுத்து அவர் இயக்கும் படத்தை வி.ஆர்.இன்டர்நேஷனல் மூவிசுக்காக ரவி ராயன் தயாரிக்கிறார். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு தன்னை அடையாளப்படுத்த விரும்பாத ஒருவர் 11 கோடி நன்கொடை கொடுத்தார்.
தசை சிதைவு நோயை குணப்படுத்தும் ஊசியின் விலை 17.5 கோடியாகும். தமிழ்நாட்டிலும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு பலர் உதவினர். தசை சிதைவு நோய் பற்றியும், அதற்கான சிகிச்சைக்கு ஏன் இவ்வளவு செலவாகிறது என்பதையும் மையமாக வைத்து விஜய்ஸ்ரீ எழுதி இயக்கி வரும் படத்தின் ஷூட்டிங் 75 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில் படத்தின் டைட்டில் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இப்படத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாக அனித்ரா நாயர், அவரது மகளாக பேபி வேதாஷ்யா நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் அமலா பால் தம்பி அபிஜித் பால், அர்ஜூன் ராஜ், ரயில் ரவி, தீபா, சில்மிஷம் சிவா, ரவி ராயன், ராமராஜன், கே.ஆர். அர்ஜூன், பேங்க் ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ரஷாந்த் ஆர்வின் இசையமைக்கிறார்.