தசரா: `தெலுங்கு ஹீரோ நானி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘தசரா’ படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, சாய்குமார், ஜரீனா வஹாப் நடித்துள்ளனர். தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் தசரா திருவிழா, இந்தியா முழுவதும் அதிக மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது. இதுபோன்ற கொண்டாட்டங்களில் ராவணன் உருவ பொம்மையை எரிப்பது ஒரு பகுதி. ‘தசரா’ படம் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைச் சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றும் அடித்தட்டு மக்களின் உலகத்தை, அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கத்தை ‘தசரா’ டீசர் சொல்லியிருக்கிறது. முதல் பிரேமில் நானி மிகப்பெரிய ராவணன் சிலைக்கு முன்னால் நிற்பது போல் காட்டப்படுகிறது. தெலுங்கானா கோதாவரிக்கானி அருகிலுள்ள வீரலப்பள்ளி கிராமத்தில் கதை நடக்கிறது. சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் மக்கள் தங்கள் கஷ்டங்களை மறக்க மது அருந்துவது வழக்கம். அந்த மக்களின் வாழ்க்கை வண்ணமயமாக இல்லை. அங்கு வசிக்கும் நானியின் உலகம் காட்டுத்தனமானது. சில தீய சக்திகள் கிராமத்தில் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும்போது அவருக்கு கோபம் ஏற்படுகிறது. அதன் முடிவு என்ன என்பது கதை. ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கியுள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் மார்ச் 30ம் தேதி படம் திரைக்கு வருகிறது.