நீட் தேர்வு ரிசல்ட் 2022: தமிழகத்தில்51.3 சதவீதமாக தேர்ச்சி விகிதம் குறைந்தது. தமிழ்நாட்டில் நீட் தேர்வில் 67,787 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் தமிழ்நாட்டை சேர்ந்த திரிவேதி 30வது இடத்தையும், ஹிரினி 43 இடமும் பெற்றனர்.
இளநிலைமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் தமிழகம் கடந்த ஆண்டைவிட 6 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. முதல் 50 இடங்களுக்குள் இரு மாணவர்கள் மட்டுமே அடைந்துள்ளனர். நாடுமுழுவதும் கடந்த ஜூலை 17ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடந்த நீட் தேர்வை 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.
முதல்முறையாக இந்தியாவுக்கு வெளியே அபு தாபி, பாங்காக், கொழும்பு, தோஹா, காத்மாண்டு, கோலாலம்பூர், லாகோஸ், மனாமா, மஸ்கட், ரியாத், ஷார்ஜா, சிங்கப்பூர், துபாய், குவைத்சிட்டியில் தேர்வு நடந்தன. இந்த நீட் தேர்வில் ஓட்டுமொத்தமாக 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவரி தனிஷ்கா முதலிடத்தைப் பிடித்தார். இவர் நீட் தேர்வில் 99.99 மதிப்பெண்கள் எடுத்தார். டெல்லியைச் சேர்ந்த மாணவி வட்ஸா ஆஷிஸ் பத்ரா 2வது இடத்தைப் பிடித்தார். வழக்கம் இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4லட்சத்து 29ஆயிரத்து 160 மாணவர்களும், 5 லட்சத்து 63ஆயிரத்து 902 மாணவிகளும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் அதிகஅளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து அதிகபட்சமாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 1.17 லட்சம் மாணவர்களும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 1.13 லட்சம் மாணவர்களும், ராஜஸ்தானில் 82,548 மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 57.43 சதவீதம் தேர்ச்சி அடைந்திருந்தநிலையில் இந்த ஆண்டு 51.28% தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 99,610 பேர் நீட் தேர்வு எழுதி, 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 1,42,894 பேர் தேர்வு எழுதி, அதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 31 ஆயிரத்து 965 மாணவர்கள் தமிழ்வழியில் தேர்வு எழுதினார்கள்.