நோபல் பரிசு: ஒவ்வொரு ஆண்டும் சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. உலகிலேயே மிக உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பிரிவுகளுக்கான பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்பட்டு வருகிறது. நோபல் பரிசு பெறுவோர்க்கு ஒரு தங்க பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.35 கோடி ரொக்கமாக வழங்கப்படும்.
அதன்படி இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு நேற்று நார்வேயில் அறிவிக்கப்பட்டது. ரஷ்ய போரால் பாதிக்கபட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடிய பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அலெஸ் பியாலியாட்ஸிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பின் நினைவு குழு, மனித உரிமைகளுக்கான மையம் என்ற உக்ரைன் அமைப்புக்கும் இந்த பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ளது.