மாம்பழம்: மாம்பழத்திலேயே அதிக விலை கொண்டது நூர்ஜஹான் ரக மாம்பழங்கள். ஆப்கானிய வம்சாவளியைச் சேர்ந்த இந்த மாம்பழங்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில் உள்ள அலிராஜ்பூர் மாவட்டத்தின் கட்டிவாடா பகுதியில் மட்டுமே விளையக் கூடியவை.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பூக்கள் பூக்கத் தொடங்கி ஜூன் மாதத்தில் காய்கள் காய்த்து விடும். ஒரு பழத்தின் விலை ரூ.1000 முதல் ரூ.2000 வரை விற்கும். இந்நிலையில் தற்போது இந்த நூர்ஜஹான் ரக மா மரங்கள் அழியும் நிலையில் இருப்பதாக கட்டிவாடா விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
தனியார் தோட்டங்களில் தற்போது வெறும் 8 நூர்ஜஹான் ரக மரங்கள் மட்டுமே இருப்பதாக அலராஜ்பூரின் கிருஷி விக்யான் கேந்திரா தலைவர் ஆர்.கே.யாதவ் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பழம் 4.5 கிலோ எடையுடன் இருந்த நூர்ஜஹான் பழங்கள் தற்போது 3.5கிலோவாக குறைந்து விட்டதாக கூறி உள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் ‘நூர்ஜஹான் மாம்பழத்தை வருங்கால சந்ததியினருக்காக காப்பாற்ற வேண்டும். தற்போது 2 மரங்களை இனப்பெருக்க முறையில் நட்டுள்ளோம். அதன்பின் இதை பயன்படுத்தி அதிக மரங்களை வளர்க்க முடிவு செய்துள்ளோம்’ என்றார். நூர்ஜஹான் மாம்பழங்கள் அதிக சுவை கொண்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.