பீகார்: பீகார் நாளந்தா மாவட்டம், பீகார் ஷெரீப் பகுதியில் உள்ள அல்லாமா இக்பால் கல்லூரியில் பிளஸ் 2 படிக்கும் மாணவன் மணிஷ் சங்கர். தற்போது அம்மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. மணிஷ் சங்கருக்கு சுந்தர்கர் பகுதியில் உள்ள பிரில்லியண்ட் கான்வென்ட் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 1ம் தேதி தேர்வு எழுத தேர்வு மையத்திற்கு மணிஷ் சங்கர் சென்ற போது அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பள்ளியில் முழுக்க முழுக்க மாணவிகள் மட்டுமே இருந்தனர்.
சுமார் 500 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். மணிஷ் சங்கரின் தேர்வறையில் 50 மாணவிகள் இருந்துள்ளனர். அவர்களின் மத்தியில் தனி ஒரு மாணவனாக அமர்ந்த மணிஷ் சங்கருக்கு சிறிது நேரத்திலேயே உடல் நடுங்க ஆரம்பித்தது. பயத்தில் வியர்த்து காெட்டி கேள்வித்தாள் தரும் முன்பாகவே மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு காய்ச்சலுடன் மாணவன் மணிஷ் சங்கர் சிகிச்சை பெற்றார். மாணவிகள் மத்தியில் அமர்ந்த மாணவன் மூர்ச்சையான சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பத்தில் மணிஷ் சங்கர் தவறுதலாக தனது பாலினத்தை பெண் என குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் மாணவிகள் தேர்வு மையத்தில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.