திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஏற்கனவே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் லட்டு பிரசாதம் வாங்கி அவற்றை பிளாஸ்டிக் கவர் மூலம் கொண்டு செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதை தடுக்கும் விதமாக பிளாஸ்டிக் கவருக்கு மாற்றாக டிஆர்டிஓ மூலம் இயற்கை முறையிலான மக்கும் தன்மை காெண்ட கவர்களை தயார் செய்து விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் பனை ஓலை கூடையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக இயற்கை வேளாண் விஞ்ஞானி விஜயராம் தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டியை சந்தித்து லட்டு பிரசாதம் கொண்டு செல்வதற்கான பனை ஓலை கூடைகளை காண்பித்தார். இதனை பார்வையிட்ட பின் பனை ஓலை கூடை விரைவில் லட்டு கவுண்டர்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தர்மா ரெட்டி தெரிவித்தார். அதே நேரத்தில் பனை ஓலை கூடைகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் லட்டு பிரசாதங்களை எடுத்து செல்லும் பக்தர்களுக்கு பனை ஓலை கூடைகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆய்வு செய்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.