தென்னிந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே பஞ்சபூத வழிபாடு மக்களிடையே இருந்து வருகிறது. இதனை இலக்கியங்களும் பறைசாற்றுகின்றன.
பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுவது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐந்தும் பஞ்சபூதங்களாகும். இயற்கையோடு ஓன்றிய வழிபாட்டையே சிவ வழிபாடாக நம் முன்னோர்கள் வழிபட்டனர். தென்னிந்தியாவில் பஞ்சபூதங்களின் பெயர்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் சிவபெருமான். அது எங்கெங்கு என்பதை இந்த பதிவில் அறியலாம்.
நிலம்:
பஞ்சபூதத் தலங்களில் முதலாவதாக இருப்பது நிலம் அந்த நிலத்தை அடிப்படையாக கொண்டு ஆட்சி புரிந்து வரும் சிவபெருமானின் தலம் காஞ்சிபுரம் ஏகம்பரநாதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அம்மையாக காமாட்சியாக பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். இது சமயக்குரவர்கள் நால்வரின் பாடல் பெற்ற தலமாக இருந்து வருகிறது.

நீர்:
திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள திருவானைக்காவல் என்ற ஊரில் ஜம்புலிங்கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி என்ற பெயரில் இத்தலம் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. இதனை அப்புலிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.ஜம்பு என்றழைக்கப்படும் வெண்நாவல் மரத்தின் அடியில் இத்தல இறைவன் அருள்புரிந்ததால் இவர் ஜம்புகேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
நெருப்பு:
திருவண்ணாமலையில் அருணாஜலேஸ்வரர் உடனுரை உண்ணாமுலை அம்மனாக காட்சி தரும் இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் நெருப்பாக விளங்குகிறது. பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற அகந்தை ஏற்பட்ட போது அடிமுடிகாண முடியாத அளவிற்கு உயர்ந்து நெருப்பு வடிவத்தில் காட்சி கொடுத்தார்.
இத்தலத்தில் உள்ள சிவபெருமானை சைவ சமயக்குரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் முருகனின் மீது இத்தலத்தில் பாடல்கள் பாடியுள்ளார். நினைத்தாலே முக்தி தரும் தலம் இது என்பது இதன் சிறப்பாகும்.
காற்று:
ஆந்திரா மாநிலம் காளஹஸ்த்தி என்ற ஊரில் அமைந்துள்ளது. வாயுத்தலமான இங்கு இறைவன் வாயு லிங்கம் என்றழைக்கப்படுகிறார். சீ என்ற சிலந்தி, காளம் என்ற பாம்பு, அத்தி எனப்படும் யானை ஆகிய மூன்றும் இத்தல இறைவனை வழிபட்டு முக்தி பெற்றதால் இவ்விடம் சீகாளகத்தி என்றும், திருகாளகத்தி என்றும், ஸ்ரீகாளகத்தி என்றும் வழங்கப்படுகிறது.
ஆகாயம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தில்லை நடராஜனாக காட்சி தரும் சிவபெருமானின் தலம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயமாக விளங்குகிறது. சிவனின் வழிபாட்டுப் பாடல்களின் ஆரம்பம் மற்றும் முடிவில் திருச்சிற்றம்பலம் என்று கூறப்படுவது இத்தலமே. எல்லாவற்றிற்கும் ஆரம்பம் மற்றும் முடிவு ஆகாயம் என்பதை உணர்த்தத்தான் திருச்சிற்றம்பலம் என்று கூறப்படுகிறது.
பஞ்ச சபைகளில் இத்தலம் பொன்னம்பலம், கனக சபை என்று வழங்கப்படுகிறது. சைவ சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற சிறப்பினைப் பெற்றுள்ளது இத்தலம்.
இதையும் படியுங்கள்: சிதம்பரம்: ஆருத்ரா தரிசனத் திருவிழா கொடியோற்றத்துடன் தொடங்கியது
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.