தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி ”தற்கொலை தடுப்பு படை ஓன்றை அரசு அமைக்க வேண்டும்” என நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிகளில் மருத்துவ சோதனைகள் நடப்பது போல பதின்ம மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை அவர்களிடம் கண்டறிந்து உதவ வேண்டும் எனவும் நாளை வரும் நாளிதழ்களிலாவது மாவர்களின் தற்கொலை செய்தி இல்லாதிருக்கட்டும்.
தமிழக அரசுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், ஊடகங்களுக்கும் கமல்ஹாசன் ஆகிய நான் கண்ணீருடன் விடுக்கும் கோரிக்கை இது.
பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20-ஆம் தேதி மட்டும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 28 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வேதனை அத்தோடு தீரவில்லை. கடந்த சில நாட்களில் மட்டும் தமிழகத்தில் நடந்த சம்பவங்களைப் பட்டியலிடுகிறேன்.

உயிர்க்கொல்லித் தேர்வான நீட் எனும் அநீதியால் நிஷாந்தி, முரளி கிருஷ்ணன், தனுஷ் ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். மயிலாடுதுறை 11-ஆம் வகுப்பு மாணவன் ரித்தீஷ் கண்ணா தற்கொலை செய்துகொண்டார். ராமநாதபுரம் ஆர்.காவனூர் ஆசாரிமடம் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். போடி குலாலர்பாளையத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். பாண்டமங்கலத்தில் 10-ஆம் வகுப்புப் பயிலும் மாணவன் பரத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் மர்மம் நீடிக்கிறது. மேச்சேரி அரசுப் பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்த மாணவி ஒருவர் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று, கால்முறிந்து சிகிச்சை பெற்று வருகிறார். காஞ்சிபுரம் ஆர்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவன் இஷிகாந்த் பள்ளி மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்று, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுபோன்ற தொடர் செய்திகள் நெஞ்சை பிளப்பதாகவும் தமிழக அரசு மாணவர்களின் நிலையை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.