ஷின்சோ அபே: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜீலை மாதம் நாரா நகரில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய உடல் 15ம் தேதி தகனம் செய்யப்பட்டது. அதன் பிறகு அவருடைய சாம்பல், எலும்புகள் எடுக்கப்பட்டு கலசத்தில் வைக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக குடும்பத்தினரிடையே அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவருக்கு அந்நாட்டு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டோக்கியாவின் புடோகன் அரங்கில் நேற்று நடந்தது. இதில் இந்தியா சார்பாக பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட 217 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஷின்சோ அபேயின் மனைவி அகி அபே மறைந்த தனது கணவர் அபேயின் அஸ்தி அடங்கிய பெட்டியை எடுத்து வந்தார். அந்த பெட்டி அலங்கரிக்கப்பட்ட மலர்களின் நடுவே வைக்கப்பட்டது.
அபேயின் உடலுக்கு அனைத்து தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அபேயின் வரலாற்று சிறப்புமிக்க உரைகள் ஒலிபரப்பப்பட்டது. ஜப்பான் பிரதமர் கிஷிடோ ‘ஜப்பான் மற்றும் உலகின் வளர்ச்சிக்காக தெளிவான பார்வை கொண்ட ஓர் உன்னதமான தலைவர் அபே’ என்று புகழாரம் சூட்டினார். பிரதமர் மோடி அவர்கள் அபேயின் அஸ்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அபேவுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்துவதை எதிர்த்து நூற்றுக்கணக்கானோர் நிகழ்ச்சி நடந்த அரங்குக்கு வெளியே அமைதி ஊர்வலம் நடத்தினர்.
பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்தியா-ஜப்பான் உறவு பலப்பட அபேயின் உன்னதமான பங்களிப்பையும் மோடி நினைவு கூர்ந்தார். இதில் இரு தரப்பு உறவு தொடர்பாக இரு தலைவர்கள் பேசியதாக வெளியுறவு அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.