கோவா விமான நிலையம்: கோவா மாநிலத்தில் ஏற்கனவே தபோலிம் விமான நிலையம் உள்ள நிலையில், இம்மாநிலத்தில் மோபா சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக கடந்த 2016 நவம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விமான நிலைய பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அதை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தபோலிம் விமான நிலையத்தை விட பல நவீன வசதிகளுடன் மோபா விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் அருணாச்சலப் பிரதேசத்தில் இட்டாநகர் பசுமை விமான நிலையம், ஜீலையில் தியோகர் விமான நிலையம், கடந்த அக்டோபரில் புகழ்பெற்ற புத்த தலமான குஷிநகர் சர்வதேச விமான நிலையம் என அடுத்தடுத்து விமான நிலையங்களை மோடி அவர்கள் திறந்து வைத்தார். மேலும் கடந்த ஆண்டு நவம்பரில் உத்திரபிரதேசத்தின் ஜெவாரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இதன் மூலம் கடந்த 2014ல் மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்றபோது நாட்டில் செயல்பாட்டு விமான நிலையங்கள் 74 மட்டுமே இருந்தது. தற்போது அது இரு மடங்காக உயர்ந்து 140 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 220 விமான நிலையங்களை மேம்படுத்தி செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.