பொன்னியின் செல்வன்: மறைந்த பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ என்ற சரித்திர நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய படம் ‘பொன்னியின் செல்வன்’. இதன் முதல் பாகம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்றதுடன், ஓடிடி தளத்திலும் மற்றும் டிவியிலும் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், ஜெயராம், அஸ்வின், ஆடுகளம் கிஷோர், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா துலிபாலா, பழைய நடிகை ஜெயசித்ரா உட்பட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். லைகா புரொடக்ஷ்ன்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இப்படத்தின் வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ 2ம் பாகத்துக்கான சில பணிகள் தாமதமாகி வருவதால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது. இச்செய்தியை படக்குழுவினர் மறுத்துள்ளனர். ‘பொன்னியின் செல்வன் 2’ படம் ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.