போப் ஆண்டவர்: உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவர் பதவியிலிருந்து தானாக யாருமே பதவி விலகியது கிடையாது என்ற நிலை 1415ம் ஆண்டு முதல் இருந்தது. ஆனால் 2013ம் ஆண்டில் அப்போதைய போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் வயது முதுமையை காரணம் காட்டி பதவி விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியாே என்பவர் போப் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரில் பொறுப்புக்களை ஏற்றார்.
தற்போது 95 வயதாகும் 16ம் பெனடிக்ட் முதுமை தொடர்பான உடலநலக் கோளாறுகளால் சிகிச்சையில் இருந்தார். சில தினங்களுக்கு முன்னர் தற்போதைய போப் முதலாம் பிரான்சிஸ் அவரை சந்தித்து நலம் விசாரித்தார். கவலைக்கிடமாக இருக்கும் 16ம் பெனடிக்ட்டுக்காக பிரார்த்தனை செய்யுமாறு முதலாம் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் இன்று காலை போப் 16ம் பெனடிக்ட் மறைந்ததாக வாடிகன் செய்தித்தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது மறைவால் கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
16ம் பெனடிக்ட்டின் இயற்பெயர் ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர். ஜெர்மனியை சேர்ந்த இவர் 2005 ஏப்ரல் மாதம் 19ம் தேதி போப் ஆண்டவராக பதவியேற்றபோது அவர் தனது பெயரை 16ம் பெனடிக்ட் என மாற்றம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.