லவ் டுடே: பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய ‘கோமாளி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பிரதீப் தான் இயக்கிய முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது அவர் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. இப்படத்தின் மூலம் அவர் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே பாசிடிவ் கருத்துக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக முதல் நாளிலேயே 6 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. தமிழகத்தில் மட்டுமே 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இந்தாண்டு வெளியான படங்களில் கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ மற்றும் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படங்கள் வெளியான முதல் நாளில் சுமார் 7 கோடி வரை வசூல் ஈட்டியுள்ள நிலையில், கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ திரைப்படம் 6 கோடி வசூலை ஈட்டியுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இந்தப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, இவானா, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளதால் வரும் நாட்களில் இப்படம் நல்ல வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.