சபரிமலை: சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டது முதலே தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஆயிரக்கணக்கில் வரும் பக்தர்கள் இரவு பகலாக சபரிமலையின் பெரிய நடை பந்தலில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சபரிமலையில் நெகிழி பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் குடிப்பதற்கான தண்ணீர் பாட்டில்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் வரிசையில் இருந்து விலகி சென்று தண்ணீர் குடித்து வருவது மிகவும் சிரமமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க ஸ்டீல் பாட்டில்களில் நோய் தடுப்பு மருந்து கலந்த கட்டணமில்லா தூய குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் ஐயப்ப பக்தர்களுக்கு ஸ்டீல் பாட்டில்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கி துவக்கி வைத்தார். பெரிய நடை பாதையில் பக்தர்களுக்கு புதிய 500 ஸ்டீல் பாட்டில்களில் மருந்து கலந்த குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் குடிநீர் அருந்தியதும் ஸ்டீல் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டு கொதிகலன்களில் இடப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு திரும்புவம் குடிநீர் வழங்கப்படுகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் போதிய குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய சன்னிதானம் செல்லும் வழியிலும், சபரிமலை சன்னிதானத்தின் பல்வேறு இடங்களிலும் நோய் தடுப்பு மருந்து கலந்த கட்டணமில்லா குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.