சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஓலிம்பியாட்டில் நிறைமாத கர்ப்பிணியாக கிராண்ட் மாஸ்டர் ஹரிகா பங்கேற்பு.
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஓலிம்பியாட் போட்டிகள் நேற்று மாலை பாரத பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இப்போட்டியில் 2000 த்திற்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 30 போட்டியாளர்கள் விளையாடுகின்றனர்.
இப்போட்டியில் ஆந்திராவை சேர்ந்த சீனியர் மகளிர் பிரிவில் கிராண்ட் மாஸ்டர் துரோணவள்ளி ஹரிகா, 31 கலந்து கொள்கிறார். இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் இந்நிலையிலும் கலந்து கொள்வது அவரின் நாட்டுப் பற்றையும் சதுரங்கத்தின் மீது வைத்துள்ள கடமை உணர்வும் போற்றும் விதத்தில் உள்ளது.

இவர் சர்வதேச தர வரிசையில் 11 ஆவது இடத்தில் இருக்கிறார். இவர் தங்கப்பதக்கம் வெல்ல ஆயத்தமாகி வருகிறார். ஹரிகா தனது 10 ஆவது வயதிலேயே தேசிய அளவிலான செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர். ஹரிகாவின் இந்த சாதனையை பாராட்டி, 2008ஆம் ஆண்டு அவருக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது கிடைத்தது.
இதையடுத்து 2012, 2015, 2017 ஆம் ஆண்டு நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டிகளில் வெண்கலம் வென்றார். இதுகுறித்து ஹரிகா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் செஸ் ஒலிம்பியாட்டுக்கு தயாராவது மிகவும் சிறப்பான விஷயம். எனது உடல் நலனையும் ஒலிம்பியாட்டுக்கு தயாராவதையும் சம நிலையில் வைத்திருக்கிறேன்.
எனக்கு ஆதரவாக இருந்து வரும் எனது கணவர் கார்த்தி மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி என கூறியிருந்தார். ஹரிகாவுக்கு அவருடைய பயிற்சியாளர் அபிஜித் குந்தே மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் பாரத் சிங் சவுஹான் உள்ளிட்டோரும் ஆதரவாக இருந்து வருகிறார்கள். வெற்றிக்கு பெயர் பெற்ற மாமல்லபுரத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் 30 வீரர்களும் வீராங்கனைகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.