தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. 36வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத் பகுதிகளில் போட்டிகள் நடைபெற இருக்கின்றது. இதனை நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்கள் கடந்த காலத்திலும் திறமையானவர்களாகவே திகழ்ந்தனர். பதக்கம் வெல்வதற்கான இந்த நகர்வுகளை முன்பே தொடங்கியிருக்கலாம். ஆனால், தொழில்முறைக்கு பதிலாக விளையாட்டுகளில் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் இருந்தது. இதை நாங்கள் சுத்தம் செய்து இளைஞர்களிடையே புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளோம். விளையாட்டில் வீரர்கள் பெறும் வெற்றி மற்ற துறைகளில் நாட்டின் வெற்றிக்கு வழி வகுக்கும்” என்றார்.

குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க விழா நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கு பெறுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து 7000 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டிகள் வருகின்ற 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையும் கவனியுங்கள்: World Heart Day 2022: இதயத்தை பாதுகாக்க சிறிய அறிவுரைகள்
இப்போட்டிகள் யாவும் அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர் ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது. முன்னதாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இதில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து உள்பட 36 விளையாட்டுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இடம் பெறுகின்றன.
முன்னதாக மகளிருக்கான டென்னிஸ் அணிகள் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு – ஹரியாணா மோதின. இதில் தமிழ்நாடு 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் அரை இறுதியில் மகாராஷ்டிராவை எதிர்கொள்கிறது தமிழ்நாடு அணி. மற்றொரு அரை இறுதியில் குஜராத் – கர்நாடகா பலப்பரீட்சை நடத்துகின்றன.
துப்பாக்கி கூடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்றில் தமிழகத்தின் கார்த்திக் சபரி ராஜ் 632.2 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார். அதேவேளையில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்றில் கர்நாடகாவின் திலோத்தமா சென் 633.6 புள்ளிகள் சேர்த்து முதலிடம் பிடித்தார்.