பி.டி.உஷா: இந்தியாவின் தங்க மங்கை என்ற பெருமைக்குரிய பி.டி.உஷாவை முதல் பெண் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்து இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஒஏ) புதிய பெருமை பெற்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 1984ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பி.டி.உஷா பெற்றார். அந்த போட்டியில் நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்து 4வது இடம் பிடித்தார். ஆசிய விளையாட்டு போட்டி உட்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் தங்கம் உட்பட பல பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் நிலவிய பிரச்சினைகள் காரணமாக 2021ல் நடைபெற வேண்டிய தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தலைவர் பதவிக்கு பி.டி.உஷாவும் மனுதாக்கல் செய்திருந்தார். வேறு யாரும் அந்த பதவிக்கு போட்டியிடாததால் உஷா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் முதல் பெண், முதல் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமைகளை 95 ஆண்டுகால ஒலிம்பிக் சங்கம் பெற்றுள்ளது. உஷாவின் தேர்வை ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நிதா அம்பானி வரவேற்றுள்ளார்.