ஆட்டோ டிரைவர்: திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப். இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர். கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு ஓணம் பம்பர் லாட்டரி ஒன்றை இரு மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதில் முதல் பரிசு 25 கோடியாகவும் இரண்டாம் பரிசு 5 கோடியாகவும் கேரள அரசு அறிவித்திருந்தது. டிக்கெட்டின் விலை 500 ரூபாயாக இருந்த போதிலும் டிக்கெட்டுக்கள் பரபரப்பாக விற்று தீர்ந்தது. மொத்தம் 67.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதன் மூலம் கேரள அரசுக்கு 300 கோடி வருவாய் கிடைத்தது.
இதனிடையே லாட்டரிக்கான பம்பர் குலுக்கல் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில் முதல் பரிசான 25 கோடி ஸ்ரீவராகம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப்புக்கு கிடைத்துள்ளது. இதனிடையே ஆட்டோ டிரைவரான அனூப் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்குதான் திருவனந்தபுரம் பழவங்காடியில் உள்ள தனது தங்கையின் கடையில் டிக்கெட்டை வாங்கியுள்ளார். மறநாளே அவர் கோடீஸ்வரானாகி விட்டார். அவர் வறுமையின் காரணமாக ஆட்டோ ஓட்டுவது, ஹோட்டல்களில் வேலை செய்வது போன்ற வேலைகளையே செய்து வந்துள்ளார்.
இதுபற்றி அனூப் கூறுகையில் ‘ஆட்டோ டிரைவரான நான், குடும்ப வறுமையின் காரணமாக மலேசியாவுக்கு சப்ளையர் வேலைக்கு செல்ல திட்டமிட்டேன். அப்போதுதான் லாட்டரி வாங்கும் யோசனை வந்தது. ஆனால் என்னிடம் 450 ரூபாய் மட்டுமே இருந்தது. அதனால் டிக்கெட் வாங்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன். பின்னர் முடிவை மாற்றிக் கொண்டு எனது மகளின் உண்டியலை உடைத்து அதில் 50 ரூபாய் எடுத்து நேற்று இரவு 8 மணிக்குதான் டிக்கெட் வாங்கினேன். எனக்கு 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்ததை என்னால் நம்பவே முடியவில்லை என்றார்’. இவருக்கு ஏஜெண்ட் கமிஷன் , வரிகள் போக 15.75 கோடி கிடைக்கும். இதில் இவர் சொந்தமாக ஹோட்டல் தொழில் தொடங்குவதாக கூறியுள்ளார்.