பழங்குடியின மக்கள்: அந்தமானில் வாழும் பழங்குடி மக்களான ‘சென்டினல்’ மக்களைப் பற்றி உருக்கமாக உருவாக்கபட்டுள்ள படம் தான் ‘புதர்’. ஜாய்ஷோர் கிரியேஷன்ஸ் உடன் இணைந்து கெர்ப்சாரா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. டாக்டர் அகஸ்டின் இப்படத்தை இயக்க, சந்தோஷ் அஞ்சல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்திற்கு மேரி ஜெனிதா என்ற பெண் இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். இவர் முதல் முறையாக ஒரே நேரத்தில் 4 மொழிகளுக்கும் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஆர். பார்த்திபன், ஆர்.கே.சுரேஷ், சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பழங்குடியினை சேர்ந்த கோக்ரி என்பவர் வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இருந்து நடித்துள்ளனர். இப்படம் கேரளா மற்றும் கர்நாடக எல்லைக்கு அப்பால் உள்ள குருபா தீவில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பேசும் பழங்குடியின மக்களின் மொழி வித்தியாசமானது மற்றும் தனித்துவமானது. இந்த மொழிக்கான எழுத்துக்கள் அங்கு இல்லை. இந்த படத்தில் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை மற்றும் மொழி 70 சதவிகிதம் பயன்படுத்தபட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இது அந்தமானில் உள்ள சென்டினல் தீவில் வாழும் பழங்குடியின மக்களின் ஒற்றுமையை கொண்டுள்ளது என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.