இந்தியாவின் பேட்மிட்டன் நட்சத்திரமான பிவி சிந்து முதன் முதலாக சிங்கப்பூரில் நடைபெற்ற ஓபன் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற மகளிர் ஓற்றையர் இறுதி போட்டியில் 11 வது தரவரிசையில் இருந்த வாங்சியுடன் போட்டியிட்டார். வாங்சி சாம்பியன் என்பதால் சிறு தவறுதல் கூட இல்லாமல் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் முழுகவனத்துடன் பிவி சிந்து விளையாடினார்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பிவி சிந்து முதல் செட்டை 21 க்கு 9 என்ற கணக்கில் எளிதாக வென்றார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது செட்டில் சீன வீராங்கனை யின் ஆதிக்கம் கை ஓங்கி இருந்தது. இரண்டாவது செட்டில் சற்று தடுமாறிய சிந்து 11க்கு 21 என்ற கணக்கில் இழந்தார்.
இதனை அடுத்து வெற்றியை தீர்மானிக்க கூடிய மூன்றாவது செட்டில் பிவி சிந்து தனது அதிரடியை காட்டினார். இதில் 21க்கு 15 என்ற கணக்கில் சிந்து கைப்பற்றினார். இதன் மூலம் முதல் முறையாக சிங்கப்பூர் ஓபன் சாம்பியன் பட்டத்தை பி வி சிந்து வென்றார்.

நடப்பாண்டில் சுவிஸ் ஓபன், சையது மோடி இன்டர்நேஷனல் தொடர் மற்றும் சிங்கப்பூர் ஓபன் என மூன்று பட்டங்களை அவர் வென்று இருக்கிறார்.
நடப்பாண்டில் பிவி சிந்து விளையாடிய 13 தொடர்களில் ஏழு முறை அரை இறுதிக்கும் 10 முறை காலிறுதிக்கும் தகுதி பெற்றிருக்கிறார். ஆறு இறுதி போட்டிகள் விளையாடி அதில் மூன்றில் வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றிக்கு பிறகு பேசிய சிந்து, முதல் செட்டை வென்ற உடனே தமக்கு இருந்த அழுத்தம் சென்று விட்டதாக குறிப்பிட்டார். இரண்டாவது செட்டில் சற்று தடுமாறி புள்ளிகளை இழந்ததாகவும் மூன்றாவது சுற்றில் அனைத்து புள்ளிகளும் முக்கியம் என்பதால் தான் கடினமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை பெற்றதாகவும் பிவி சிந்து கூறினார்.
கடந்த சில தொடர்களில் முக்கியமான ஆட்டங்களில் தோற்று வெளியேறியது ஏமாற்றத்தை தந்ததாகவும் இறுதியாக சாம்பியன் பட்டம் வென்றது உத்வேகத்தை கொடுப்பதாகவும் பிவி சிந்து கூறியுள்ளார். பிவி சிந்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர். தற்போது ஒரு வாரம் ஓய்வில் இருந்து விட்டு வரும் 28ஆம் தேதி முதல் காமன்வெல்த் தொடரில் பங்கேற்க பிர்மிங்காம் செல்வதாகவும் பி வி சிந்து தெரிவித்தார்.
முன்னதாக, சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரின் அரையிறுதியில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து, 21-15, 21-7 என்ற நேர் செட்களில் ஜப்பானிய வீராங்கனை செயீனா கவாகமியை வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.