சிங்கப்பூர் சலூன்: ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்த படம் ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்டுல விசேஷம்’. அவர் நடித்த இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அவர் தனது படங்களில் சில சமூக கருத்துக்களை காமெடியாக சொல்லியிருப்பார். அடுத்து அவர் ஹீரோவாக நடித்திருக்கும் படத்திற்கு ‘சிங்கப்பூர் சலூன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இந்த படத்தில் பாலாஜி சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இதற்காக அவர் 2 மாதங்கள் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் மேலும் பல முக்கிய நடிகர்-நடிகைகள் நடித்துள்ளனர். படத்தை அடுத்த வருடம் கோடையில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக ஆர்.ஜே.பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தாடி, மீசையுடம் இருக்கும் புகைப்படம் மற்றும் தாடி, மீசை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இதனை அவர் தெரிவித்துள்ளார்.