ருத்ரன்: தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கின்றனர். வரும் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஏற்கனவே பல படங்களில் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது வழக்கமாக இருந்தது. கடந்த கொஞ்ச நாட்களாக இந்த டிரெண்டிங் குறைந்து வந்தது. தற்போது இப்படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ என்ற பழைய பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரியின் தந்தை சி.எல்.ஆனந்தன் கடந்த 1962ல் ஹீரோவாக நடித்து வெளியான படம் ‘வீரத்திருமகன்’. ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் சி்.எல்.ஆனந்தன், சச்சு நடித்திருந்த இந்த படத்தில் ஹிட்டான பாடல் ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்’. எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் எழுத பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி பாடியிருந்தனர். தற்போது இப்பாடலை ‘ருத்ரன்’ படத்துக்காக ரீமிக்ஸ் செய்து தரண்குமார் இசையமைத்திருக்கிறார். நித்யஸ்ரீ இப்பாடலை பாடியுள்ளார்.