மயில்சாமி: நேற்று முன்தினம் அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் மயில்சாமி காலமானார். அவருக்கு வயது 57. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் நிரூபர்களிடம் கூறும்போது,
‘மயில்சாமி’ எனக்கு நீண்ட கால நண்பர். அவர் தீவிர சிவ பக்தர். திருவண்ணாமலை கிரிவலத்துக்கு போகும்போதெல்லாம் எனக்கு போன் செய்வார். கடந்த ஆண்டும் எனக்கு போன் செய்திருக்கிறார். படப்பிடிப்பில் இருந்ததால் அவரிடம் பேச முடியவில்லை. இது எனக்கு வருத்தம் அளிக்கிறது. தனது தீவிர பக்தனை தனக்குரிய நாளில் சிவன் அழைத்துக் கொண்டான். விவேக், மயில்சாமியின் இழப்பு திரையுலகிற்கு மட்டுமல்ல இந்த சமூகத்துக்கும் பேரிழப்புதான். இருவரும் நல்ல சிந்தனைவாதிகள், சமூக அக்கறை கொண்டவர்கள். மேகநாதீஸ்வரர் கோயிலுக்கு என்னை அழைத்து வந்து லிங்கத்திற்கு என் கையால் பாலாபிஷேகம் செய்து வைக்க வேண்டும் என்பது மயில்சாமியின் ஆசையாக இருந்தது. கண்டிப்பாக அந்த ஆசையை நான் நிறைவேற்றுவேன்’ என்று அவர் கூறினார்.
கைலாய வாத்தியம் இசைத்து மயில்சாமி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ரசிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை வடபழனி ஏவிஎம் சுடுகாட்டில் அவர் உடல் நேற்று பகல் தகனம் செய்யப்பட்டது.