பாபா: 2002ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பாபா’. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே தயாரித்திருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவதாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ரஜினியை வைத்து பாபா படத்தை இயக்கினார். இப்படத்தில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருந்தார். ஆஷிஷ் வித்யார்த்தி, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார், ரியாஷ் கான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மானின் இசை இப்படத்திற்கு பெரும் பலம் என்றே சொல்லலாம். இதில் பிருந்தா, லாரன்ஸ், பிரபுதேவா உள்ளிட்டோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
இப்படம் இமயமலையில் வாழ்ந்த பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். மேலும் ரஜினி அவர்கள் பாபா மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் இப்படம் வெளியான சமயத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படத்தில் ரஜினி அடிக்கடி காண்பிக்கும் பாபா முத்திரை குழந்தைகள் முதர் பெரியவர்கள் வரை அனைவரையும் வசீகரித்தது. இன்று வரை அந்த முத்திரையை யாரும் மறக்கவில்லை என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் தற்போது இந்த படம் புதுப்பொலிவுடன் திரையிடலுக்கு தயாராகி வருகிறது. இப்படம் முழுவதுமாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு ப்ரேமும் நவீன் தொழில் நுட்பத்துடன் டிஜிட்டல் மையமாக்கப்பட்டு வருகிறது. ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் அப்பவே மாபெரும் வெற்றியடைந்த நிலையில் தற்போது இந்த பாடல்கள் மேலும் மெருகூட்டப்பட்டு வருகிறது. ஆகவே புதுப்பாெலிவுடன் கூடிய பாபா படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாக உள்ளது.