ராஷ்மிகா மந்தனா: விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் திரைக்கு வந்திருந்த ‘அர்ஜூன் ரெட்டி’ என்ற படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘கபீர் சங்’ மூலமாக பாலிவுட்டை அதிர வைத்த அவர் தற்போது ரன்பீர் கபூர் நடிப்பில் ‘அனிமல்’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தை பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மிரட்டலான ஆக்ஷன் தோற்றத்தில் ரன்பீர் கபூர் இடம் பெற்றுள்ளார். நீண்ட தலைமுடி, அடர்ந்த தாடி, கூர்மையான கோடாரியுடன் இருக்கும் ரன்பீர் கபூரின் லுக் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் ரன்பீர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் அனில் கபூர் நடிக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மாெழிகளிலும் திரையிடப்பட உள்ளது.