இராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் என்னும் ஊரில் பெண்களின் மாங்கல்யத்தை காப்பவளாக இருந்து காட்சி தருபவள் நித்திய சுமங்கலி மாரியம்மன். சிவனும் சக்தியும் சேர்ந்தது தான் இவ்வுலகம் இவ்விரண்டில் ஓன்று இல்லையேல் உலகம் இருளும் சிவன் வேறு இல்லை சக்தி வேறு இல்லை என்பது போல வருடம் முழுவதும் தன் கணவனை தன் இருப்பிடத்திலேயே வைத்திருப்பவர் தான் நித்திய சுமங்கலி மாரியம்மன்.
மாரியின் வழிபாட்டு முறை பன்னெடும் காலம் முதல் இருந்து வரும் வழிபாடாகும். மாரி என்றால் மழை தருபவள் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த உலகம் நிலைத்து நிற்க மும்மாரி மழை அவசியம் ஆதலால் மழை தெய்வமாக மாரியை வழங்கும் மரபு காலங்காலமாக இருந்து வருகின்றது.
மாரியம்மன் நோய்யிலிருந்து காப்பவளாகவும் இருந்து காத்து வருகின்றாள். வெப்பம் நிறைந்த கோடை காலத்தில் அம்மை நோய், அக்கி போன்ற பல வெப்பு நோய்களை தீர்ப்பவளாக பார்க்கப்படும் மாரியம்மன் தரிசனம் நிறைந்த மனநிறைவை தரும். அந்த வகையில் மாங்கல்ய பலம் தரும் மாரியம்மனாக இருந்து வருபவள் நித்திய சுமங்கலி மாரியம்மன். இந்த மாரியம்மனின் தல வரலாற்றினையும் விழாக்களையும் இப்பதிவில் அறியலாம்.
இதையும் கவனியுங்கள்: லலிதா சஹஸ்ரநாமம் தமிழில்

நித்திய சுமங்கலி பெயர் காரணம்:
கொங்கு மண்டலத்தில் குடிக் கொண்டிருக்கும் மாரியம்மன் கோவிலுக்கும் மற்ற மாரியம்மன் கோவிலுக்கும் மிகுந்த வேறுபாடு காணப்படும். அதிலும், இந்த நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கும் மற்ற மாரியம்மன் கோவிலுக்கும் வேறுபாடு உண்டு.
கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாவின் போது மட்டும் வேப்ப மரத்தால் ஆன கம்பம் நடப்பட்டு அதனை சிவனாக பாவித்து திருகல்யாணம் நடத்தி திருவிழா நடத்துகின்றனர். விழா முடிந்ததும் கம்பம் அகற்றப்பட்டு நீர்நிலைகளில் சேர்த்து விடுவது வழக்கம்.
ஆனால், இந்த திருக்கோவிலில் மட்டும் வருடத்தின் 365 நாட்களும் கம்பம் நட்டு வழிபடுவர். அம்மனின் கணவனான சிவன் தன் முன்னேயே அம்பிகையை நீங்காதவளாக இருந்து பக்தர்களுக்கு காட்ணி தருவதாக ஐதீகம். எப்போதும் கணவனை நீங்காதவளாக இருந்து வருவதால் இந்த மாரியம்மனை நித்திய சுமங்கலி மாரியம்மன் என்கின்றனர்.
வருடத்திற்கு ஓருமுறை வரும் ஐப்பசி மாத திருவிழாவின் போது மட்டும் புதிய கம்பம் நடப்பட்டு வருவதை வழக்கமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர் பக்தர்கள். இது போன்றதொறு வேறு நிகழ்வையும் கூறுவர் அதாவது, வல்வில் ஓரியின் காலத்தில் ஓரு சிற்றரசர்க்கு நோய்வாய் பட்டு படுத்தப்படுக்கையாக கிடந்ததாகவும் அதை எண்ணி வருந்திய மனைவி அரசி இந்த கோவிலுக்கு வந்து மாரியம்மனிடம் அழுது தன் கணவனை காப்பாற்று என்று கதறி அழுதுள்ளாள்.
தன் தாலிக் கொடியை கையிலேந்தி அழுதவளாக காட்சி தந்த அந்த அரசியின் கணவனின் உயிரை காப்பாற்றி அருள்புரிந்தாள் அன்றிலிருந்து இக்கோயிலை தாலி வரம் அருளும் நித்திய சுமங்கலி என்று போற்றி வணங்கி வந்தாள் பின் அதுவே இந்த மக்களின் மனதில் இன்றளவும் நின்று விட்டது என்ற தலவரலாறு கூறுகின்றது.
தலவரலாறு:
கொங்கு மண்டலத்தை செம்மையாக ஆட்சி புரிந்த குறுநில அரசன் வல்வில் ஓரி. இவர் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்தான். அவரின் காலத்தில் கட்டப்பட்ட கோவிலே இந்த நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று தல வரலாறு கூறுகின்றது. ஏனெனில் இந்த கோவில் அருகில் உள்ள சிவதலம் கைலாசநாதர் திருத்தலம் இந்த தலத்தை உருவாக்கியவர் வல்வில் ஓரி என்று அந்த கோவிலின் தலவரலாறு செப்புகின்றது.
நித்திய சுமங்கலி மாரியம்மன் இப்போது குடிக் கொண்டிருக்கும் அந்த இடத்தில் விவசாயி ஓருவர் தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தார் அப்போது கலப்பை ஓரு இடத்தில் சிக்கி கொண்டது என்ன நிகழ்ந்தது என்று தோண்டி பார்த்த போது அந்த இடத்தில் பீடம் ஓன்று கிடைத்தது. வெளியே எடுத்தவுடன் தான் மாரியம்மன் எனவும் அவளுக்கு அங்கேயே கோயில் அமைத்து வழிபாடு நடத்த வேண்டும் எனவும் அசரீரி ஒலித்தது. அங்கேயே ஊர் மக்கள் சிறு குடில் அமைத்து வழிபட்டனர் என்கிறது தலவரலாறு.
திருவிழாக்கள்:
இந்த திருகோவிலில் ஐப்பசி மாதம் முதல் செவ்வாயன்று திருவிழா துவங்கி 15 நாட்கள் திருவிழா நடத்தப்படுகின்றது. திருவிழா துவங்கும் நாள் முதல் தினமும் அம்மன் திருவீதி உலா நடத்தப்படுகின்றது.
பூச்சாட்டுதல், கம்பம் மாற்றுதல், தீமிதித்தல், பொங்கல் வைத்தல், தேரோட்டம் என திருவிழா நடைபெறுகிறது வசந்த உற்சவத்துடன் திருவிழா முடிவடையும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான 3-ஆம் நாள் வேப்ப மர கம்பம் மாற்றப்படும். அன்றைய தினம் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு தயிர் சாத பிரசாதம் வழங்கப்படும். இதனை பெற்று உண்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைத்து வருகின்றது.
திருவிழாவில் அம்மனுக்கு நேர்த்திக் கடனாக அக்னி சட்டியெடுத்தல், அலகு குத்துதல், தீமிதித்தல், பொங்கல் வைத்தல், உருளுதண்டம் போடுதல் போன்றவற்றை செய்கின்றனர் பக்தர்கள்.
பெண்களின் மாங்கலியத்தை காக்கும் மாரியம்மன்:
கணவனின் ஆயுளில் கண்டம் இருந்தாலும், நோய்வாய்ப்பட்டு அவதியில் இருந்தாலும் தாலி வரம் கேட்டு இங்கு வந்து அம்மனை வேண்டினால் தாயாக இருந்து மாங்கல்ய பலத்தை அளிப்பவாளக விளங்குகிறாள் இந்த நித்திய சுமங்கலி மாரியம்மன்.
அம்மை, அக்கி, காய்ச்சல் போன்ற வெப்பத்தால் ஏற்படுகின்ற நோய்களை போக்கி மக்களை காத்து அருளும் இந்த மாரியம்மனை நாமும் சென்று தரிசித்து நோய் பிணிகள் நீங்க பிராத்தனை செய்வோம்.
இது போன்ற பல தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.