சிம்பு: கடந்த 2017ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ படத்தின் ரீமேக் தான் ‘பத்து தல’. இந்த படத்தை கன்னடத்தில் இயக்கிய நார்தன் தான் தமிழில் இந்த படத்தை முதலில் இயக்கினார். பின்னர் அவர் சில காரணங்களால் விலகிவிட்டதால் ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். சிம்புவின் பிறந்தநாளையொட்டி வெளியான இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் டிசம்பர் 14ம் தேதி இப்படம் வெளியாகும் என்று ஏற்கனேவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இடையில் சிம்பு தனது தந்தையின் உடல்நல குறைவு சிகிச்சைக்காக சில நாட்கள் அமெரிக்கா சென்றதால் படப்பிடிப்பு தடைபட்டது. இதனால் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாமதமானதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில் அம்மாதம் தனுஷின் ‘வாத்தி’ உள்பட பல படங்கள் வெளியாக உள்ளதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. அதனால் இப்படம் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.