ஆர்ஆர்ஆர்: ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் கடந்த மார்ச் 25ம் தேதி வெளியான இந்த படம் ரூ.1150 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது. இந்தப் படம் ‘கோல்டன் குளோப்’ விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம் பிடித்துள்ளது. கோல்டன் குளோப் விருதுக்கு இந்திய படம் நாமினேஷனில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக ‘கோல்டன் குளோப்’ விருது கருதப்படுகிறது. ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷன் இந்த விழாவை நடத்துகிறது. வரும் ஜனவரி 10ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விழா நடைபெற உள்ளது.
இதையடுத்து விருதுக்காக இறுதியாக பரிந்துரை செய்யப்பட்டதில் 5 இடங்களை பிடித்த படங்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வாகியுள்ளன. அலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி, ரிஷப் ஷெட்டியின் காந்தாரா, செல்லோ ஷோ ஆகிய படங்கள் விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மட்டுமே நாமினேஷனில் இடம் பிடித்துள்ளது.