ஆஸ்கர் விருது: 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. ஆஸ்கர் மேடையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பாடப்பட்டது. பாடலுக்கு கலைஞர்கள் நடனமாடினர். பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் நாட்டு நாட்டு பாடலை ஆஸ்கர் மேடையில் பாடினர். இதனையடுத்து பரிந்துரையில் இருந்த ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை தட்டி தூக்கியது.
இப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதினை பெற்றுக்கொண்டனர். ஆஸ்கர் மேடையில் விருதினை பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி “And must put me on the top of the world” என்ற ராகத்தில் பாடி நன்றி தெரிவித்தார். இதற்கு முன்பு அமெரிக்காவில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் ‘சிறந்த ஒரிஜினல் பாடல்’ என்ற விருதை இப்பாடல் வென்றது. தென்னிந்திய திரைப்பட பாடல் ஒன்று ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியலுக்கு தகுதி பெற்று வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு ஆஸ்கர் விருதினை வென்ற இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கீரவாணி. கடந்த 2009ல் ‘slumdog millianaire’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருந்த நிலையில், தற்போது ஆர்ஆர்ஆர் படத்திற்காக கீரவாணி ஆஸ்கர் விருதினை பெற்றிருக்கிறார்.